மார்கழி 3ம் நாள் திருவிழா : சுசீந்திரம் கோயிலில் மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சி, திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: சுசீந்திரம் கோயிலில் நேற்று இரவு நடந்த மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்  மார்கழி பெருந்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23ம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி, 3ம் திருவிழாவான நேற்று (16ம் தேதி) இரவு நடந்தது. கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையரான சிவன், பார்வதியை சந்திப்பதே மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி ஆகும். இதையொட்டி வேளிமலை குமாரசுவாமி நேற்று முன் தினம் காலை சுசீந்திரம் புறப்பட்டார்.

இரவு நாகர்கோவிலில் தங்கிய வேளிமலை குமாரசுவாமி நேற்று காலை சுசீந்திரம் சென்றார். இதே போல் வலம்புரி விநாயகரும் சுசீந்திரம்  கொண்டு செல்லப்பட்டார். கோட்டார், கரியமாணிக்கபுரம், ஆஸ்ரமம் உள்பட வழி நெடுக சுவாமி விக்ரகங்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும்  வணங்கினர். பின்னர் இரவில் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி, அம்பாள், விஷ்ணு ஆகியோர் வீதி உலா வந்தனர். வடக்கு தெருவில் கோயில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தாய், தந்தையரை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

உமா மகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை மூவரும் 3 முறை சுற்றி வந்து ஆசி பெற்றனர். பின் கிழக்கு திசை நோக்கி அனைவரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள், குழந்தைகளும் வந்து இருந்தனர். டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

முன்னதாக நேற்று காலை (ஞாயிறு) மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். காலை புஷ்பக விமானத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நாளை (18ம்தேதி) 5ம் திருவிழாவையொட்டி காலை 6 மணிக்கு வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் சுவாமி, அம்பாள், பெருமாள் மூர்த்திகளை கருடன் வலம் வரும்  காட்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 22ம் தேதி காலை7.30க்கு நடக்கிறது. அன்று இரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நடக்கிறது. 23ம் தேதி 10ம் திருவிழா அன்று, காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா காட்சி நடக்கிறது.

Related Stories: