புறம் அறம் அல்ல!

“உங்களில் ஒருவர், மற்றவரைப்பற்றி புறம் பேச வேண்டாம்” (திருக்குர்ஆன் 49:12) திருமறை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தீய நடைமுறைகளில் ஒன்று இந்தப் புறம் பேசுதல். ஆனால் இந்தப் புறம் பேசுதல் இன்று, இல்லாத இடம் எங்கேனும் இருக்கிறதா? அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், வணிக நிறுவனங்களில் என எங்கும் இருக்கும் ஒரு சமூகத் தீமைதான் புறம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “புறம் பேசுதல் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். தோழர்கள், “இறைவனும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். இறைத்தூதர் அவர்கள், “ஒருவர் தம் சகோதரர் பற்றி அவர் விரும்பாதவற்றைப் பேசுவதாகும்” என்று கூறினார்.

Advertising
Advertising

உடனே தோழர்கள்,“அந்த விஷயம் அவரிடம் இருந்தாலுமா?” என்று திருப்பிக்கேட்க, நபிகளார், “அவரிடம் இருக்கும் விஷயத்தைப் பேசுவதுதான் புறம். அவரிடம் இல்லாத செய்தியைக் குறித்து நீ பேசினால் அது அவதூறு” என்றார்கள் நபிகளார். தன் உருவம், தன் குணம், தன் நடத்தை, தன் குடும்பம் பற்றியெல்லாம் மற்றவர்கள் குறைகூறிப் பேசும்போது அதை மனிதன் வெறுக்கவே செய்கிறான். அடுத்தவரை இழிவுபடுத்த வேண்டும், அவருக்கு இருக்கும் நற்பெயரைத் தகர்க்க வேண்டும் எனும் ஆசையின் வெளிப்பாடுதான் புறம். சக மனிதனின் மானம் மரியாதையைக் கிழித்து உண்பதற்கு இணையானது இந்தப் புறம் பேசும் வெறி. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இது ஒரு மனநோய்.

நோயுற்ற உள்ளத்தின், கோழைத் தனத்தின் அடையாளம் இது. வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்யும் வேலை இது. புறம் பேசுதல் எனும் அருவெறுப்பான செயலை ஓர் அருவெருப்பான செயலுடன் ஒப்பிட்டுத் திருமறை கண்டிக்கிறது: “இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தம் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள், நீங்களே அதனை அருவெருப்பாய்க் கருதுகின்றீர்கள்.”(குர்ஆன் 49:12) மனித மாமிசம் உண்பதை மனிதர்கள் வெறுப்பார்கள். அதுவும் இறந்துபோன சொந்த சகோதரரின் மாமிசம் என்றால்...? அந்த அளவுக்குக் கொடூரமானது புறம். ‘புறம் அறம் அல்ல’ என்பதை உணர்ந்து இன்றே அத்தீமையை விட்டொழிப்போம்.

இந்த வார சிந்தனை

“இழித்துரைத்துக் கொண்டும்(முதுகுக்குப் பின்னால்) குறைகூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.”(குர்ஆன் 104:1)

சிராஜுல்ஹஸன்

Related Stories: