கந்தசஷ்டியை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் சூரசம்ஹாரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் திட்டகுடி நான்குமுனைச்சாலை சந்திப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஐப்பசி மாதம் கந்தசஷ்டியை முன்னிட்டு கோயில் நந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சன்னதியில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சஷ்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை ராமேஸ்வரம் திட்டகுடி நான்குமுனைச்சாலை சந்திப்பில் அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு முருகன் திட்டகுடி நான்குமுனை சந்திப்பிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து துர்க்கையம்மன் கோயில் முன்பு சூரனின் தலையை கொய்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சூரனின் சிலையில் இருந்த தலையை கோயில் குருக்கள் வேல் கொண்டு குத்தி துண்டித்ததை தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், பேஷ்கார் அண்ணாதுரை, கமலநாதன் உட்பட கோயில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சூரசம்ஹாரத்தை கண்டு களித்தனர்.

Related Stories: