பார்க்கிங் விமர்சனம்

ஒரு பைக், ஒரு கார் மட்டுமே நிறுத்தக்கூடிய பார்க்கிங் ஏரியா கொண்ட இளவரசுக்கு சொந்தமான குடியிருப்பில், கீழ்வீட்டில் மனைவி ரமா, மகள் பிரார்த்தனா நாதனுடன் பல வருடங்களாக வாடகைக்கு குடியிருக்கிறார், குன்றத்தூர் பேரூராட்சி அலுவலக ஈஓ எம்.எஸ்.பாஸ்கர். மேல்வீட்டில் மனைவி இந்துஜாவுடன் குடியேறுகிறார், ஹரீஷ் கல்யாண். அவருக்கு ஐடி கம்பெனியில் வேலை. இந்துஜா கர்ப்பமாக இருக்கிறார். நல்ல நட்புடன் இருந்த குடும்பங்களுக்கு மத்தியில், எமனாக வருகிறது ஹரீஷ் கல்யாணின் கார். அதை பார்க்கிங் செய்வதால், பைக்கை நிறுத்த முடியாமல் சிரமப்படும் எம்.எஸ்.பாஸ்கர், ஒருநாள் காரில் சின்ன விரிசல் ஏற்பட காரணமாகிறார்.

இதையடுத்து ஏற்படும் வாக்குவாதம் ஈகோ மோதலாக முற்றுகிறது. உடனே எம்.எஸ்.பாஸ்கர் கார் வாங்கி நிறுத்த, தனது காரை ரோட்டில் நிறுத்த முடியாமல் ஹரீஷ் கல்யாண் குமுறுகிறார். அப்போது ஏற்பட்ட சண்டையில், தன் மகளிடம் தகாத முறையில் நடந்ததாக பொய் புகார் கொடுத்து, ஹரீஷ் கல்யாணை அவமானப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்புகிறார் எம்.எஸ்.பாஸ்கர். பிறகு வெளியில் வரும் ஹரீஷ் கல்யாண், ஆபீசுக்குச் சென்று எம்.எஸ்.பாஸ்கரின் டேபிளுக்கு கீழே பணத்தைப் போட்டுவிட்டு வந்து, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் என்று தகவல் கொடுக்கிறார்.

அவர்கள் சோதனையிட்டு கண்டுபிடித்து எம்.எஸ்.பாஸ்கரை சஸ்பெண்ட் செய்கின்றனர். நாளுக்கு நாள் ஈகோ மோதல் அதிகரித்து ஹரீஷ் கல்யாணும், எம்.எஸ்.பாஸ்கரும் ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்கு மாறுகின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ஹரீஷ் கல்யாணுக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் இது மிகவும் முக்கியமான படம். மிகச்சிறப்பாக நடித்து, ஈகோ வெறிபிடித்தவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். காமெடி செய்து குணச்சித்திர நடிகராக மாறிய எம்.எஸ்.பாஸ்கர், இதில் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார்.

குழந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கும் ஹரீஷ் கல்யாண், இந்துஜாவுடனான நெருக்கத்தை மிக நாகரிகமாக வெளிப்படுத்தி குடும்ப நாயகனாகப் பிரகாசித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கருடன் மோதும்போது, அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறார். ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கருக்கு ஈடுகொடுத்து ரமா, இந்துஜா, பிரார்த்தனா நாதன் நடித்துள்ளனர்.

ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், லைட்டிங் மற்றும் கேமரா கோணங்களின் மூலம் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் கதையை நகர்த்த ஜிஜூ சன்னியின் ஒளிப்பதிவு பேருதவி செய்துள்ளது. சாம் சி.எஸ்சின் பின்னணி இசை, காட்சிகளின் வீரியத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஹரீஷ் கல்யாணும், எம்.எஸ்.பாஸ்கரும் மோதும் காட்சிகளில் அவரது இசை பரபரப்பு ஏற்படுத்துகிறது. எல்லா இடங்களிலும் காணப்படும் பார்க்கிங் பிரச்னையை திரையில் அழுத்தமாகச் சொன்ன இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனைப் பாராட்டலாம். ‘விட்டுக்கொடுத்தலே மனிநேயத்தின் மாண்பு’ என்று ‘பார்க்கிங்’ வலியுறுத்துகிறது.

The post பார்க்கிங் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: