லியோ – திரைவிமர்சனம்

7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஸ்கின் , உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பிரம்மாண்டத் திரைப்படம் ‘லியோ‘.
மனைவி சத்யா(த்ரிஷா), மகன் சித்து(மேத்யூ தாமஸ்), மகள் சின்டு இவர்களுடன் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் கஃபே ஷாப் நடத்திக்கொண்டு நண்பர்கள் சகிதமாக காஷ்மீரில் வாழ்ந்து வருகிறார் பார்த்திபன்(விஜய்) மேலும் விலங்குகள் பாதுகாவலர் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறார்.

திடீரென கொலை மற்றும் கொள்ளைக் காரர்கள் ரூபத்தில் பார்த்திபன் குடும்பத்தார் நடத்தும் காபி ஷாப்பிற்கு பிரச்னை தேடி வருகிறது. அங்கே நிகழும் சம்பவங்கள் பார்த்திபனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது. அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் என கதை நகர்கிறது. இதற்கிடையில் யார் இந்த ‘லியோ‘? தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்மந்தம் என்பது மீதிக் கதை.

தமிழ் சினிமா பார்த்துப் பழகிய பழைய கதை என பேட்டிகளிலேயே வெளிப்படையாகச் சொல்லிவிட்ட லோகேஷ் கனகராஜ் எந்த அளவிற்கு தன் மேக்கிங்கை நம்புகிறார் என்பது தெரிந்தது. அதற்கேற்ப படம் முழுக்கவே விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக இதுவரை தமிழ் சினிமா கண்டிராத விலங்குகளுக்கான கிராபிக்ஸில் மிரட்டல். அதற்கான மெனெக்கெடல் காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

விஜய் நடிப்பு பிரமாதம். குடும்பத்தைக் காப்பாற்றப் போராட்டம் ஒரு பக்கம் ஒருவர் மாற்றி ஒருவராக தேடி வரும் வில்லன் குரூப் இன்னொரு பக்கம் என மனிதர் இதற்கு முந்தையப் படங்களைக் காட்டிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக காபி ஷாப் , பேக்டரிகளில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் மாஸ் மாஸ்டர் ரகம்.

த்ரிஷா இந்தக் கேரக்டருக்கு சம்மதித்ததற்கே பாராட்டுகள். காரணம் டீனேஜ் வயது மகனுக்கு தாய் என்பதை ஒப்புக்கொள்ள எந்த முன்னணி நாயகியும் அவ்வளவு சுலபமாக சம்மதிக்க மாட்டார்கள். சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் , மூவரும் மூன்று தூண்களாக விஜய் என்னும் கூரையை மிக அற்புதமாக தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அவர்களால்தான் விஜய் கேரக்டர் மேற்கொண்டு ஹைலைட்டாகத் தெரிகிறது. படம் நெடுக நினைத்துப் பார்க்க முடியாத நடிகர்கள் பட்டியல், நிறைய சர்ப்ரைஸ்கள் என லோகியின் ட்ரீட் இங்கேயும் சோடைப் போகவில்லை.

படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசைதான். அதிலும் ‘பயம்‘ என்பதைக் கான்செப்டாக வைத்து ஓரிடத்தில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி டிராக் சபாஷ் ரகம். அன்பறிவு மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் லோகேஷுக்கு வலது கை என்றே சொல்லலாம். ஆக்ஷன் அதிரடியில் விளையாட்டுக் காட்டியிருக்கிறார்கள். என்ன பின் பாதியில் அது மட்டுமே இருப்பதுதான் சற்றே சலிப்பாகிவிடுகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு தாருமாறு. நல்ல ஒலி – ஒளி அமைப்புள்ள திரையரங்குகளில் பார்த்தால் இன்னும் நல்ல சினிமாட்டிக் அனுபவம் கிடைக்கும்.

யாரென்றே தெரியாத ஒருவரைத் தேடி இத்தனை வில்லன்கள் வருவதும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் காவல் துறையும் லாஜிக் இடிக்கிறது மொமெண்ட் . என்னதான் லோகேஷ் கனகராஜ் படமாக ராவாக இருப்பினும் விஜய் என்ற நடிகருக்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால் அதீத வன்முறை , ஓவர்டோஸ் ஆக்ஷன்களைத் தவிர்த்திருக்கலாம். மேலும் ‘விக்ரம்‘, ‘கைதி‘ இதற்கு முந்தைய படங்களின் பெஞ்ச் மார்க் காட்சியமைப்பும் எங்கேயோ மிஸ் ஆகியதாக தோன்றியது.

மொத்தத்தில் ‘லியோ‘ விஜய் ரசிகர்களுக்கு தளபதி + லோகி விருந்து, மற்றவர்களுக்கு நல்ல விஷுவல் விருந்து.

The post லியோ – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: