லகான் பட கலை இயக்குனர் தற்கொலை

மும்பை: திரைக்கு வந்த ‘தேவதாஸ்’, ‘ஜோதா அக்பர்’, ‘லகான்’ உள்பட ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு ஆடம்பரமான அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குனர், நிதின் சந்திரகாந்த் தேசாய் (57). சிறந்த கலை இயக்கத்துக்கான தேசிய திரைப்பட விருதை 4 முறை பெற்றுள்ள அவர், மும்பை கர்ஜத் பகுதியில் அமைந்துள்ள தனது என்.டி ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வரும் 9ம் தேதி அவர் தனது 58வது பிறந்தநாள் விழாவை கொண்டாட இருந்த நிலையில், திடீரென்று இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிதின் சந்திரகாந்த் தேசாயின் அகால் மரணம், பாலிவுட் வட்டாரத்தில் அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த நிதி சந்திரகாந்த் தேசாயின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடனே பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரண மேற்கொண்டுள்ளனர். நிதின் சந்திரகாந்த் தேசாயின் திடீர் தற்கொலை முடிவுக்கு நிதி நெருக்கடிதான் முக்கிய காரணம் என்று, கர்ஜத் பகுதி எம்எல்ஏ மகேஷ் பல்டி கூறியுள்ளார். அவர் பல நாட்களாக நிதி நெருக்கடியால் சிக்கித்தவித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

4 தேசிய விருதுகளை வென்ற ஒரு திரைப்படக்கலைஞர், நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post லகான் பட கலை இயக்குனர் தற்கொலை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: