திருவண்ணாமலை, ஏப். 9: திருவண்ணாமலை மாவட்டத்தில், 32,847 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ₹63.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சியிலும் நலனிலும் தனி அக்கறை கொண்டு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.
நாட்டின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத பல சிறப்பு திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாட்டில் மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்கவும், உரிமைகளை வழங்கவும், சமுகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும் தேவையான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை 10,525 மாற்றுத்திறனாகளிகள் பெறுகின்றனர். அதன்மூலம், மாதந்தோறும் தலா ₹2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல், வருவாய் துறையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ₹1500 உதவித்ெதாகையை, 22,322 மாற்றுத்திறனாளிகள் பெறுகின்றனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி, செயலிகளுடன் கூடிய கைபேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், செயற்கை கால், சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவி, ஊன்றுகோல், சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் 1,795 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹52.72 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருமண நிதியுதவி, வங்கி கடன் மானியம், ஆவின் பாலகம் அமைத்தல், கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களின் பயன்கள் 3,018 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹11 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், திருவண்ணாமலை தொகுதி எம்பி மேம்பாட்டு நிதியில் இருந்து 18 நபர்களுக்கு ₹18.32 லட்சம் மதிப்பிலும், ஆரணி தொகுதி எம்பி நிதியிலிருந்து 5 நபர்களுக்கு ₹5.09 லட்சம் மதிப்பிலும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2024-25 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 4 ஆண்டில் மட்டும் ₹63.95 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் 300 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் 9 நபர்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்க ₹3.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக 50 நபர்களுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 21 வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில், 55 ஆயிரத்து 352 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 51 ஆயிரத்து 214 மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
The post கடந்த 4 ஆண்டுகளில் ₹63.95 கோடி நலத்திட்ட உதவிகள் ஏற்றம் தரும் எண்ணற்ற திட்டங்கள்: தமிழக அரசு அசத்தல் 32,843 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை appeared first on Dinakaran.