வீடு அடமான கடன் தராததால் வங்கி ஊழியருக்கு கத்தி வெட்டு: செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, ஏப்.12: செய்யாறு அருகே வீடு அடமான கடன் தர மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் நேரு நகரை சேர்ந்தவர் ராஜா என்பவரது மகன் தனுஷ்(23). இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஏற்கனவே மற்றொரு தனியார் வங்கியில் வேலை பார்த்தபோது அங்கு செய்யாறு தாலுகா கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் கிருஷ்ணமூர்த்தி(35) என்பவர், அடமான கடன் பெற வந்துள்ளார். அப்போது இடத்தை ஆய்வு செய்ய வந்தபோது வங்கி கூறியபடி பரிவர்த்தனை கட்டணம் ரூ.1000 வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி குறித்து அவரது ஊரில் விசாரித்தபோது அவர் கடன் வாங்கினால் முறையாக செலுத்த மாட்டார் என தெரிவித்தார்களாம். இதனால் அடமானக் கடன் பரிந்துரைப்பதில் கால தாமதமானது.

இதனால் கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தனுசுக்கு போன் செய்வதால், அவரது நம்பரை பிளாக் செய்து விட்டார். இந்நிலையில் தனுஷ் நேற்று மாலை 4 மணியளவில் வேறு ஒருவருக்கு கடன் கொடுப்பது சம்பந்தமாக செய்யாறில் விசாரணையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி வேறொரு செல்போன் எண்ணில் தனுஷை தொடர்பு கொண்டு கடன் வாங்குவது போல் விசாரித்து அவரை சிறுங்கட்டூர் பகுதிக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணிக்கு நேரில் வரவழைத்துள்ளார். அப்போது ஆற்காடு சாலையில் செங்கட்டான்குண்டில் கூட்டுரோடு அருகே மறைந்திருந்த கிருஷ்ணமூர்த்தி பைக்கில் வந்த தனுஷை மடக்கி, ‘எனது செல்போன் எண்ணை ஏன் பிளாக்கில் போட்டு விட்டாய், அதனால்தான் வேறு ஒரு எண்ணில் இருந்து உன்னை வரவைத்தேன். எனக்கு கடனும் கொடுக்க மாட்டேன் என்கிறாய், பரிவர்த்தனை கட்டமாக பெறப்பட்ட பணத்தையும் திருப்பித் தரவில்லை’ எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு தனுஷ், ‘நீ கடன் பெற வந்த வங்கியில் இருந்து நான் நின்று விட்டேன். தற்போது வேறொரு வங்கியில் பணியாற்றுகிறேன் உனக்கு பணம் வேண்டுமென்றால், அந்த வங்கியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணமூர்த்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் தனுஷை வெட்ட முயன்றுள்ளார். அப்போது நூல் இழையில் தப்பி கையால் தடுத்தபோது கையில் கத்தி கிழித்து ரத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்ததும், கத்தியை வீசிவிட்டு அங்கு மறைவாக இருந்த பைக்கில் இருவருடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி தப்பி ஓடிவிட்டார்.

காயமடைந்த தனுஷ் அங்கிருந்தவர்கள் உதவியுடன் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த தோரணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும் நடந்த சம்பவம் குறித்து தனுஷிடம் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய கிருஷ்ணமூர்த்தி அவருக்கு உடந்தையாக இருந்த இரு வாலிபர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீடு அடமான கடன் தராததால் வங்கி ஊழியருக்கு கத்தி வெட்டு: செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: