வந்தவாசி, ஏப்.12: வந்தவாசி அருகே நூடுல்சில் தவறை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(45). இவர் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராணி, மகன் அரிஷ் குமார்(21). நேற்று முன்தினம் கணேசன் சொந்த வேலை காரணமாக வந்தவாசிக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி ராணி கடையை கவனித்து கொண்டிருந்தார். இதனால் மகன் அரிஷ்குமார் கடையில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சென்று வீட்டில் சாப்பிடுவதற்காக தயார் செய்துள்ளார். அப்போது சுடுதண்ணீரில் நூடுல்ஸ் கொட்டியபோது, அதில் இறந்து கிடந்த தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அரிஷ்குமார் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயகுமார், விமல் ஆகியோர் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது தவளையுடன் இருந்த நூடுல்சை அரிஷ் குமார் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் காட்டினார். தொடர்ந்து கடையில் இருந்து 3 நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற அதிகாரிகள், அரிஷ்குமாரிடம் புகார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘நூடுல்ஸ் பாக்கெட்டில் தவளை இருப்பதாக புகார் வந்ததையடுத்து, அதே பேட்ச் எண்ணுடன் உள்ள நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஆய்வுக்கு உட்படுத்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதே பேட்ச் உடன் உள்ள நூடுல்ஸ் வகைகள் மற்ற கடைகளிலும் உள்ளதா? என்று ஆய்வு செய்து சேகரிக்கப்படும். இந்த பேட்ச் எண்ணுடன் கூடிய நூடுல்ஸ்கள் தமிழகத்தில் உள்ள 6 அரசு ஆய்வு கூடங்களில் ஏதாவது ஒரு ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வறிக்கையில் இறந்து கிடந்த தவளையின் உடற்கூறுகள், இருக்கும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.
The post நூடுல்சில் இறந்து கிடந்த தவளை மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு: வந்தவாசி அருகே அதிர்ச்சி appeared first on Dinakaran.