திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் முன்னேற்பாடுகளை கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு

திருவண்ணாமலை, ஏப். 10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரிசித்தி பெற்றது. அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 12ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு ெதாடங்கி, 13ம் தேதி காலை 6.08 மணிக்கு நிறைவடைகிறது.

மேலும், சனி, ஞாயிறு மற்றும் சித்திரை மாதப்பிறப்பு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக அமைந்துள்ள நாட்களில் பவுர்ணமி கிரிவலம் அமைந்திருப்பதால், பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்து அண்ணாமலையார் கோயிலில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கோயில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டு மருந்து மாத்திரைகள், ஆக்சிஜன் சிலிண்டர் தேவையான அளவில் இருக்கிறதா என கேட்டறிந்தார்.

மேலும், கோடை வெயில் காலம் என்பதால், கோயிலுக்குள் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கவும், நீர், மோர் வழங்கவும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலகத்தில், பவுர்ணமி முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது.

அப்போது, கோயிலில் தரிசன வரிசையில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் விரைவாக தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யவும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார். டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், ஆர்டிஓ ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் முன்னேற்பாடுகளை கலெக்டர், எஸ்பி நேரடி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: