சேத்துப்பட்டு, ஏப். 10: திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி சித்த வைத்தியரை ஏமாற்றி 2 கிராம் தாலியுடன் எஸ்கேப் ஆன பெண்ணை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமம், கொள்ளை மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமநாதன்(63). சித்த வைத்தியர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக இவர் தனியாக வசித்து வருகிறார். 2 மாதத்திற்கு முன்பு மறுமணம் செய்வதற்கு மணமகள் தேவை என பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார்.
அதை பார்த்து கடந்த 3ம் தேதி சென்னையை சேர்ந்த கீர்த்தி(55) ராமநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சென்னைக்கு அழைத்துள்ளார். ராமநாதனும் சென்னை வேளச்சேரிக்கு சென்று அங்குள்ள வணிகர் சங்கத்தில் தங்கி மறுநாள்(4ம் தேதி) கீர்த்தியை சந்தித்துள்ளார்.
தொடர்ந்து, இருவரும் திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க டி நகரில் உள்ள நகை கடைக்கு சென்று 2 கிராம் தாலி, அரை கிராம் மூக்குத்தி, மெட்டி ஆகியவற்றை வாங்கினர். பின்னர் கீர்த்தி அவருடைய உறவினர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உள்ளதாக கூறி ஆட்டோவில் ராமநாதனை அங்கு அழைத்து சென்று அங்கு லேபில் அமரவைத்து விட்டு பாத்ரூம் சென்று வருவதாக கூறி நகையுடன் சென்றவர் மீண்டும் வரவில்லை.
இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமநாதன் வேளச்சேரிக்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் (5ம் தேதி) தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கீர்த்தி மீது புகார் செய்தார். ஆனால் சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி என்பதால் ராமநாதனை அங்கு சென்று புகார் செய்யுமாறு போலீசார் கூறியதையடுத்து அவரும் ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதனை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி நகையை எடுத்து சென்ற கீர்த்தியை தேடி வருகின்றனர்.
The post சித்த வைத்தியரை ஏமாற்றி தாலியுடன் பெண் எஸ்கேப் நடவடிக்கை கோரி போலீசில் புகார் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி appeared first on Dinakaran.