தண்டராம்பட்டு, ஏப். 11: திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, தானிப்பாடி, வாணாபுரம், ரெட்டியாபாளையம், ஆத்திப்பாடி, போந்தை, அல்லப்பனூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மரவள்ளி குச்சியில் இலை சுருள் வைரஸ் நோய் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவது எப்படி, சுருள் வைரஸ் நோய் தாக்காமல் பராமரிப்பது எப்படி என்பதனை நேற்று உதவி பேராசிரியர், பயிர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வாழவச்சனூர் டாக்டர் சஞ்சய் காந்தி வயலாய்வு செய்தனர். இதில் இந்த நோயானது வெள்ளை தத்துப்பூச்சி மூலமே பரவுகிறது.
இந்த நோயின் ஆரம்பத்தில் இலை வெளிர் மஞ்சள் நிறத்தில் தென்படும். பிறகு இலையின் அளவு குறையும். இலையின் வடிவம் உருமாறி முறுக்கி காணப்படும். இதனை கட்டுப்படுத்த நோய் இல்லாத விதை கரணையை தேர்ந்தெடுத்தல் முக்கியமானது. குறிப்பாக நீர் மேலாண்மை உர மேலாண்மை தழைசத்து உரம் பிரித்து இடுதல் மற்றும் பயிர்சுழற்சி முறையை பின்பற்றவேண்டும். நோய் தாக்கப்பட்ட செடி, இலைகளை சேமித்து அழித்து விட வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டையை ஒரு எக்டருக்கு 10 முதல் 15 எண்கள் வைக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 3 மி.லி கலந்து தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் கூறினார்.
The post வயல் ஆய்வில் விவசாயிகளுக்கு விளக்கம் மரவள்ளி கிழங்கு செடிகளில் இலை சுருள் வைரஸ் நோய் தாக்காமல் தடுப்பது எப்படி? appeared first on Dinakaran.