செய்யாறு, ஏப். 11: செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் இன்று 11ம் தேதி தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தெப்பல் விழா இன்று 11ம் தேதியும், நாளை 12ம் தேதியும் நாளை மறுநாள் 13ம் தேதியும் என 3 நாட்கள் நடைபெறுகிறது. விழாவினை ஒட்டி இன்று காலை கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகிறது.
காலை 6 மணிக்கு சுவாமி புறப்பாடு தொடங்கி 10 மணியளவில் வியாபாரிகள் சங்க கட்டிடத்திடம் மண்டப படி செய்யப்படுகிறது. தொடர்ந்து ராஜாஜி பூங்கா அருகில் பஜார் பகுதி வியாபாரிகளின் மண்டபடியும் மாலை 3 மணி அளவில் தெப்பக்குளத்தை உற்சவமூர்த்திகள் வந்தடைவார்கள். இரவு சோட சோபசார தீபாராதனையுடன் சுவாமிகள் அலங்காரத்தில் தெப்பலில் எழுந்தருளி 3முறை வலம் வருதல் வானவேடிக்கையுடன் நடைபெறும்.
இதேபோல் நாளை 12ம் தேதியும், நாளை மறுநாள் 13ம் தேதியில் தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து வியாபாரிகள் சங்க தெப்பல் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
The post செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தெப்பல் உற்சவம் இன்று தொடக்கம்: 3 நாட்கள் நடக்கிறது appeared first on Dinakaran.