கோடை வெப்பத்தை தணித்த கனமழை: செங்கத்தில் 16.4 மிமீ மழை பதிவானது

திருவண்ணாமலை, ஏப். 4: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்தது. அதனால், சுட்டெரித்த கோடை வெயிலின் தாக்கம் தணிந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடும் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடையின் ஆரம்பத்திலேயே அதிகபட்சமாக 100 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைத்தது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் அனல்காற்றாக வீசுகிறது.

எனவே, கோடையின் கொடுமையால் பொதுமக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த மழை, கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தற்காலிக ஆறுதலை அளித்திருக்கிறது. விட்டு விட்டு மிதமான மழையும், இதமான சூழலும் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குறிப்பாக, செங்கத்தில் 16.4 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மேலும், வெயில் அளவு நேற்று டிகிரியாக பதிவானது. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா சுற்று வட்டார பகுதிகளான செய்யாறு, திருவத்திபுரம், வடதண்டலம், தூளி, அனக்காவூர், பல்லி, இருமந்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் லேசான சாரல் மழை பரவலாக விட்டு, விட்டு பெய்தது இதனால் காலையில் பணிக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சற்று சிரமத்துக்கு ஆளாகினர்.

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான ஆரணி, சேவூர், எஸ்.வி.நகரம் கண்ணமங்கலம், தேவிகாபுரம், காட்டுகாநல்லூர், அம்மாபாளையம், ரெட்டிப் பாளையம், களம்பூர், கொங்காரம்பட்டு, அடையபுலம், குண்ணத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழையும், விட்டு விட்டு லேசான சாரல் மழையும் அரைமணி நேரம் பெய்து வந்தது. மேலும், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று திடீரென பெய்த மழையால் ஆரணி பகுதியில் வெயிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றுவீசி வருவதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. காடை வெப்பம் எதிர்பாராத மழையால் தற்போது தணிந்திருப்பது ஆறுதலை அளித்திருக்கிறது.

The post கோடை வெப்பத்தை தணித்த கனமழை: செங்கத்தில் 16.4 மிமீ மழை பதிவானது appeared first on Dinakaran.

Related Stories: