திருச்சி, ஏப்.3: திருச்சி, தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோயில் சுத்தபூஜை விழா நேற்று நடந்தது. அம்மன் ஓலைப்பிடாரியில் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருச்சி தென்னுாரில் உக்கிரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கு அம்மன் வீற்றிருப்பதால் இத்தலம் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 5 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதைத்தொடர்ந்து இந்தாண்டு திருவிழா மார்ச் 31ம் தேதி கடைசி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஏப் 1ம் தேதி உக்கிரமாகாளியம்மன் காளிவட்டம் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை திருக்கோயிலிலிருந்து வெளியே ஓலைப்பிடாரியில் அழைத்து வந்தனர். ஏப் 2ம் தேதி (நேற்று) சுத்தபூஜை விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி தென்னூர் பகுதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் மஞ்சல் நீர்ஊற்றி, இளநீர், மாவிலக்கு, பூ, பழங்கள் போன்ற மங்கள பொருட்களை படைத்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிகுடித்தல் நிகழ்ச்சி இன்று (ஏப்.3ம்) தென்னுார் மந்தையில் நடைபெறுகிறது. ஏப் 4ம் ேததி மஞ்சல் நீராட்டு விழா, ஏப் 5ம் தேதி அம்மன் திருக்கோயில் புகுதல் நிகழ்ச்சியும், ஏப் 6ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தென்னுார் மக்கள் செய்துவருகின்றனர்.
The post பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் அலங்கரித்த தேரில் வீதியுலா appeared first on Dinakaran.