திருச்சி, ஏப்.10: திருச்சி மாவட்ட கோர்ட்டில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச தின விழா மற்றும் சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில சமர தீர்வு மையம் (சென்னை) ஐகோர்ட் உத்தரவின்படி, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் வழிகாட்டுதலின்படி, நேற்று திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் சமரச தீர்வு தின விழா நடந்தது.
விழாவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கிறிஸ்டோபர் தலைமை வகித்து, சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி திருச்சி மாநகராட்சி வரை சென்று திரும்பியது. ஊர்வலத்தின் போது சமர தீர்வு மையம் குறித்து விளக்கும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
பேரணியில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா மற்றும் சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள். அரசு வக்கீல்கள், சமரசர்கள் (Mediators) வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், சட்ட உதவி எதிர்தரப்பு வக்கீல்கள், கோர்ட் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சட்டக்கல்லூரி, தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவிகள், சட்டத் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சமரச தீர்வு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயலாளருமான, சார்பு நீதிபதி சிவக்குமார் செய்திருந்தார்.
The post திருச்சி மாவட்ட கோர்ட்டில் சமரச விழிப்புணர்வு பேரணி: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.