ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழா; நம்பெருமாள், கமலவல்லி நாச்சியார் ேசர்த்தி சேவை

திருச்சி, ஏப். 9: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருச்சி உறையூரில் ஸ்ரீநம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தாண்டு பங்குனி திருநாள் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.

6ம் திருநாளான நேற்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஸ்ரீநம்பெருமாள், உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளும் சேர்த்தி சேவை சாதித்தார். ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரி வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணிக்கு உறையூர் நாச்சியார் கோயில் மஹாஜன உபய மண்படம் வந்தடைந்தார். தொடர்ந்து மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நாச்சியார் கோயில் முன் மண்டபம் வந்தடைந்தார். மதியம் 1.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் வந்தடைந்தார். மதியம் 2 மணி முதல் இன்று (9ம் தேதி) காலை 12 மணி வரை உறையூரில் ஸ்ரீநம்பெருமாள் – கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை சாதித்தனர்.

பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு வெளியாண்டால் சந்நிதியில் மாலை மாற்றிக்கொண்டு காலை 4.30 மணிக்கு கண்ணாடி அறை வந்தடைந்தாா். உறையூர் எழுந்தருளல் சேர்த்தி சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீநம்பெருமாள் மற்றும் கமலவல்லி நாச்சியாரை தரிசனம் செய்தனர்.

7ம் திருநாளான இன்று (9ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளலும், 8ம் திருநாளான நாளை (10ம் தேதி) குதிரை வாகனத்திலும், 9ம் திருநாளான 11ம் தேதி ஸ்ரீநம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேர் (கோரதம்) 12ம் தேதியும், 10ம் திருநாளான 12ம் தேதி மாலை படிப்பு கண்டருளலும், 11ம் திருநாளான 13ம் ேததி ஆளும் பல்லக்கிலும் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருள்கிறார். பங்குனி திருவிழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோயில் பணியாட்கள் செய்து வருகின்றனர்.

The post ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் பங்குனி திருவிழா; நம்பெருமாள், கமலவல்லி நாச்சியார் ேசர்த்தி சேவை appeared first on Dinakaran.

Related Stories: