சமையல் எரிவாயு விலை உயர்வு: ஒன்றிய அரசை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்

திருச்சி, ஏப். 12: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நேற்று ஒப்பாரி வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு வீட்டுக்கு உபயோகிக்கும் சமையல் எரிவாயு விலையை ரூ.50 உயர்த்தியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த விலை உயர்வுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் முக்காடு அணிந்து அதனை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பகுதி செயலாளர்கள் தர்மா, விஜயேந்திரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் சார்லஸ், மாவட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ், சங்க நிர்வாகிகள் ராகிலா, நவநீதகிருஷ்ணன், ஹாஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சமையல் எரிவாயு விலை உயர்வு: ஒன்றிய அரசை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: