வேலூர், மார்ச் 28: வேலூரில் கோடை வெயில் உக்கிரம் காரணமாக பொதுமக்களின் தாகம் தணிக்க மாநகராட்சி சார்பில் 15 இடங்களில் குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகம் முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்து பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தணிக்க வேலூர் மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் ஜானகி உத்தரவின்பேரில் வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி-சித்தூர் பஸ் நிறுத்தம், கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் கோயில்கள், காய்கறி மார்க்கெட், பஸ் நிறுத்தங்கள், காட்பாடி ரயில் நிலைய சந்திப்பு உள்ளிட்ட 15 இடங்களில் குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் தினமும் குடிநீர் டேங்க் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனை கண்காணிக்க மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பொதுமக்களின் தாகம் தீர்க்க 15 இடங்களில் குடிநீர் டேங்க் வேலூர் மாநகராட்சி ஏற்பாடு கோடை வெயிலை சமாளிக்க appeared first on Dinakaran.