வேலூர், மார்ச் 30: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளும் கணினி உதவியாளர்களை பணியமர்த்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. வழிகாட்டுதல்களில் வரிசை எண் 1ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கணினி அறிவியலில் பட்டப்படிப்பு முடித்தவர்களை அவுட்சோர்சிங் மூலம் கணினி உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. வரிசை எண் 2ல் உரிய கல்வித்தகுதி இல்லாமல், அவுட் சோர்சிங் முறையில் கணினி உதவியாளர்கள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் அவர்களை நீக்கம் செய்து விட்டு அரசு விதிகளின்படி கல்வித்தகுதி உள்ளவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த இருவழிகாட்டுதல் அம்சங்கள் மீதான தெளிவுரைகள் வழங்குவதற்கான பணிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் நடைபெற்று வருகிறது. இத்தெளிவுரை அடங்கிய கடிதம் வரும் வரை மேற்கண்ட இரண்டு வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைத்து கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் பொன்னையா அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
The post கணினி உதவியாளர்கள் நியமன நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு கலெக்டர்களுக்கு அரசு அவசர கடிதம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட appeared first on Dinakaran.