கே.வி.குப்பம், மார்ச் 26: கே.வி.குப்பம் அருகே விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்கள், நெற்பயிர்களை சேதப்படுத்திய யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசி, மாளியாபட்டு, பனமடங்கி, பள்ளத்தூர், காளாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலையையொட்டி உள்ள விளைநிலங்களில் கடந்த சில நாட்களாக யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு பனமடங்கி ஊராட்சி பள்ளத்தூர், ராமாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து தென்னை மரங்கள், நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகளால் சேதமான பயிர்களை வருவாய்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். தொடர்ந்து யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து பயிர்களை சேதப்படுத்தி வருவது அப்பகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகளால் சேதமான பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் அறிக்கையை பெற் றவுடன் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
The post யானைகள் தொடர் அட்டகாசம் தென்னை, நெற்பயிர்கள் சேதம் கே.வி.குப்பம் அருகே விவசாய நிலத்தில் appeared first on Dinakaran.