விபத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.87.71 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு

வேலூர், மார்ச் 30: பைக்குகள் மோதிய விபத்தில் இறந்த இந்து அறநிலையத்துறை ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.87.71 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. வேலூர் அடுத்த பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(42). இவர் இந்து அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக கோயில்களுக்கு அவ்வபோது ஆய்வுக்காக செல்வார். இதன்படி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளிகொண்டா செல்வதற்காக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த பைக், சீனிவாசனின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த சீனிவாசன் வேலூர்தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவருக்கு, அதே ஆண்டு மே மாதம் மூளைச்சாவு ஏற்பட்டது. இந்நிலையில் கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் சீனிவாசனின் மனைவி வாணி மற்றும் அவரது குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கணவர் இறப்புக்கு, டூவீலரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது உறுதிப்படுத்தியதுடன், மனுதாரர்களுக்கு இழப்பீடாக, ரூ.87.71 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் 2 மாதத்தில் வழங்க வேண்டும் என, தி ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

The post விபத்தில் இறந்த அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.87.71 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: