பள்ளிகொண்டா, மார்ச் 27: பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வர்ர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 12 நாள் பிரமோற்சவ தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டு பிரமோற்சவம் அடுத்த மாதம் 2ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி 7ம் நாள் திருத்தேர் உற்சவத்துடன் 13ம் தேதி வரை 12 நாட்கள் பிரமோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், விழாவை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், 12 நாள் தேர்த்திருவிழாவில் இரவு நேரத்தில் நடைபெறும் உற்சவ பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா, மற்றும் 7ம் நாள் தேர்த்திருவிழா, 10நாள் திருவிழா என நடைபெற உள்ளதால் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை வசதிகளை செய்து கொடுக்கவும், உள்ளாட்சிதுறை சார்பில் தேர் செல்லும் வீதியில் உள்ள மேடு பள்ளங்களை சரிசெய்திடவும், தேரினை தல ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
இந்த 12 நாட்கள் பிரமோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தேர்த்திருவிழா அன்று கூடுதல் போலீசார் நியமிக்கவும் காவல்துறைக்கு தாசில்தார் உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவி குணசுந்தரிபாலு, விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ், கோயில் செயல் அலுவலர் பிரியா, மண்டல துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் தர்மகர்த்தாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் 12 நாள் பிரமோற்சவ தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.