வேலூர், மார்ச் 27: பரிகார பூஜை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 சவரன் நகைகளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் பள்ளஇடையம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜெயபால், தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி(53). இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் சரஸ்வதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், `நாங்கள் திருப்பதியில் இருந்து வந்துள்ளோம். உங்களது மகனுக்கு தோஷம் உள்ளது. அதை நீக்கினால் விரைவில் திருமணம் நடக்கும். இதற்கு சில பரிகார பூஜை செய்ய வேண்டும்’ என தெரிவித்தனர்.
இதைநம்பிய சரஸ்வதி, அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அனுமதித்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது மர்மநபர்கள் இருவரும் ஒரு வெள்ளை காகிதத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து தருமாறும், பூஜைக்காக தங்கச்சங்கிலியை தருமாறும் கூறினர். அதன்பேரில் சரஸ்வதி தான் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட மர்மநபர்கள் பூஜை செய்வதுபோல் நடித்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள கோயிலுக்கு நகையை எடுத்துச்சென்று தோஷம் கழித்து அதனை திரும்ப கொண்டுவந்து ஒப்படைப்பதாக கூறிச்சென்றனர். நகையுடன் சென்ற இருவரும் அதன்பின்னர் திரும்பவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரஸ்வதி, அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகையுடன் தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.
The post வேலூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 சவரன் நகை அபேஸ் appeared first on Dinakaran.