கொய்யாவில் கூடுதல் மகசூலுக்கு சத்துக்குறைபாட்டை சரி செய்யுங்க: தோட்டக்கலை துறையினர் அட்வைஸ்

கூடலூர்: கொய்யா மரங்களை ஊட்டச்சத்துடன் பராமரிக்கும் முறை குறித்து தோட்டக்கலை துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். கொய்யா பல சத்துகள் நிறைந்த பழப்பயிராகும். சந்தைகளில் கொய்யா பழங்களுக்கு தேவையும் அதிகமாக உள்ளது. இதனால் நல்ல விலையும் கிடைக்கிறது. இந்த நிலையில் தேவையான உரங்களை தக்க சமயத்தில் அளித்து நன்கு கவனித்தால் நல்ல மகசூல் கிடைக்கும என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொய்யா மரத்தைப் பொருத்தவரை, 1 மரத்திற்கு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை முறையே 1 கிலோ வீதம் இட வேண்டும். இதனை 2 சமமாக பிரித்து மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் இட வேண்டும்.

அடித்தண்டில் இருந்து 1 மீட்டர் தொலைவில் 1 அடி அகலம் மற்றும் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து மேற்கண்ட உரங்களை இட்டு மண்ணால் மூடி உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். இலைவழி உணவாக தெளிக்க வேண்டும். போரான் சத்து குறைபாடு இருந்தால் பழங்கள் சில நேரங்களில் வெடித்து காணப்படும். கடினமாகவும் இருக்கும். இலைகள் சிறுத்து காணப்படும். இக்குறைபாட்டை தவிர்க்க 0.3 சதவீதம் போராக்ஸ் தெளிக்க வேண்டும். நுண்ணூட்ட சத்து குறைபாட்டினால் இலைகள் சிறுத்தல், கணுக்களிடையே இடைவெளி குறைந்து செடிகள் குத்து செடிகள் போல் தோற்றம் தருதல், இலைகள் வெளிர்தல், ஓரங்கள் தீய்ந்த தோற்றம் முதலியன ஏற்படும். இதனை நிவர்த்தி செய்ய 25 கிராம் துத்தநாக சல்பேட், 25 கிராம் மக்னீசியம் சல்பேட், 25 கிராம் மாங்கனீஸ் சல்பேட்,

12.5 கிராம் காப்பர் சல்பேட் மற்றும் 12.5 கிராம் பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து அதனுடன் 1 மில்லி ஒட்டும் திரவமாகிய டீப்பால் புதிய தளிர்கள் தோன்றும் போது 1 மாதம் கழித்து, பூக்கும் தருணம் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் தெளிக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர், மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்ய வேண்டும். செடிகளின் அடிப்பக்கத்தில் அவ்வப்போது தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். 1 பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்கிவிட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கொய்யாவில் கூடுதல் மகசூலுக்கு சத்துக்குறைபாட்டை சரி செய்யுங்க: தோட்டக்கலை துறையினர் அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: