அவரது நினைவை ஒட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16ம் தேதியன்று மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பு செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுடன் தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்படுகிறது.
படைப்புலகில் இயங்கும் அனைவராலும் உயரிய விருதாக கருதப்படும் மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2025ம் ஆண்ற்காக பேராசிரியர் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்விழா ராணி சீதை அரங்கத்தில் வரும் 16ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. விருதுகளை உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் வழங்குகிறார். தமிழின் முக்கிய படைப்பாளியாக, கல்வியாளராக, திறனாய்வாளராக, இதழாளராக, நவீன இலக்கியத்தில் புதிய சிந்தனைக் கோட்டுபாடுகளை இலக்கிய அமைப்புகளை உருவாக்கியவராக அறியப்படும் பேராசிரியர் தமிழவன் பல்வேறு கல்லூரிகளில் மட்டுமின்றி பெங்களூர் பல்கலை, ஆந்திர திராவிடப் பல்கலை மற்றும் போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
50 ஆண்டுகால இலக்கியப் பரிச்சயத்தினாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்ற பாண்டித்தியத்தினாலும் படைத்த கட்டுரைகள், விமர்சனங்கள், நாவல்கள், சிறுகதைகள் மூலம் இவர் ஓர் இலக்கியப் பேராளுமையாகத் திகழ்கிறார். தமிழிலக்கியப் பரப்பில் பதிப்பாளராக கட்டுரையாளராக, தமிழிசை குறித்த ஆய்வாளராக, திரைக்கலையின் பல்வேறு படைப்புகளின் தொகுப்பாளராக, இசையுலக ஆளுமைகளின் வரலாற்றை பதிவு செய்தவராக அறியப்படுவர் ப.திருநாவுக்கரசு. 35 ஆண்டுகளாக இலக்கியப் பரப்பில் தொடர்ந்து இயங்கும் இவரது புலம்பெயர்ந்தோர் கவிதைகள் தொகுப்பு, சினிமா (தொகுப்பும் ஆக்கமும்) திரை இசையில் தமிழிசை உள்ளிட்ட படைப்புகளும், குறும்படங்கள் குறித்த இவரது 75க்கும் அதிகமான பட்டறைகளும், நிழல் பத்திரிக்கையும் குறிப்பிடத்தக்கவை.
The post பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் 16ம் தேதி வழங்குகிறார் appeared first on Dinakaran.