பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வி முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம், என்னென்ன பாடப்பிரிவுகள் எல்லாம் படிக்கலாம் என்று முழு விவரங்களை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தினகரன் நாளிதழ் மற்றும் விஐடி சென்னை இணைந்து வழங்குகிற மாபெரும் கல்வி கண்காட்சி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி இருக்கிறோம். தமிழகத்தில் இருக்கக்கூடிய உயர்ந்த கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் உயர்நிலை கல்வியை கண்காட்சியாக்கி அந்த கல்வி நிறுவனத்தினுடைய பெருமையும் அந்த கல்வி நிறுவனத்துடைய பணிகளையும், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் நடுநிலையாளர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு எழுச்சி மிகுந்த கண்காட்சியை இன்றைக்கு நாம் துவக்கி இருக்கிறோம்.
தமிழ்நாடு உயர்கல்விகள் எந்த அளவிற்கு உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்தியா உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட நம்மை பார்த்து வியக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் உயர்கல்வி தமிழ்நாடு முதல் இடத்தில் முந்திச் செல்கிற சூழலை உருவாக்கி இருக்கிறோம். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி தந்த தமிழக அரசினுடைய நிலைப்பாட்டை நாம் பெரிதும் பாராட்ட வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற வார்த்தையினுடைய உண்மை பொருளை தமிழக அரசும், அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
கல்வியில் இந்திய அளவில் போட்டி போடுகிற தமிழ்நாடு உலக அளவில் போட்டி போட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்ருடைய எண்ணம். அதனால்தான் கல்வியும் மருத்துவமும் எனக்கு இரண்டு கண்கள் என சொல்லி அதனை உயர்ந்த நிலைக்கு வருவதற்கு எல்லா நிலையிலும் முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார். எனவே, முதலமைச்சரின் எண்ணத்தை ஈடேற்றக் கூடிய வகையில் இந்த கல்வி கண்காட்சி துணையிருக்கும் அதற்கு சேவை புரியும் இந்த மன நிறைவோடு அனைவருக்கும் வாழ்த்துக்களை நன்றிகளை பாராட்டுகளை சொல்லி துவக்கி வைத்திருக்கிறேன். கடந்த காலங்களில் இருந்த உயர்கல்வியினுடைய வளர்ச்சி விகிதாச்சாரம் இன்றைக்கு தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்து இருக்கிறது.
ஏழை எளிய மாணவர்களும் உயர் கல்வி பெற முடியும் என்ற இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களும் படிக்கும் வகையில் பல புதுப்பிக்கப்பட்ட பாடப்பிரிவுகள், புதுப்புது கல்லூரிகள் என உயர்க்கல்வியை கட்டமைத்து உயர்ந்து நிற்கிறோம். இதனை மேலும் சிறப்பாக கட்டமைக்க தமிழக அரசு துணை நிற்கும். அதற்கான அறிவிப்புகளை எல்லாம் சட்டப்பேரவையில் முதலமைச்சரோடு கலந்து பேசி வெளியிட இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ கல்லூரியில் சேர்ந்தோம், படித்தோம், பட்டம் பெற்றோம், வீட்டிற்கு சென்றோம், வேலையில்லாமல் அலைகிறோம் என்று இருக்கக்கூடாது என்பது தான் முதல்வரின் எண்ணம்.
படிக்கும்போதே சுயக் கல்வியை கற்று, படித்து முடித்து வெளியே செல்லும் போது அரசு வேலை, இல்லையென்றால் தானாகவே சுயமாக ஒரு தொழிலை தொடங்கி கொள்வதற்கான அனைத்து திறனையும் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இந்த நான் முதல்வன். இன்னைக்கு புதுமைப்பெண் திட்டம் காரணமாக பெண்கள் எல்லா நிலைகளிலும் உயர்ந்திருக்கிறார்கள். இன்னும் விகிதாச்சாரம் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் ஆண்களை விட பெண்கள் உயர்க்கல்வியில் சேர்கின்றனர். மாணவிகளுக்கு தரப்பட்டதை போல் மாணவர்களுக்கும் தமிழ்புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்றைக்கு 3 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயன்படக்கூடிய வகையில் அந்த திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வெளிநாடுகளில் உள்ளவர்கள் கூட நம்மை பார்த்து வியக்கும் வகையில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடுதான் என்பதை அரசும், பல்கலைக்கழகங்களும் நிரூபிக்கின்றன: அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம் appeared first on Dinakaran.