ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு உயர்த்த ரூ.2,798 கோடி ஒதுக்கீடு: உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவை உயர்த்த ரூ.2,798 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக கல்வி, திறன்மேம்பாடு, வீட்டுவசதி, உட்கட்டமைப்பு போன்றவைக்காக தனித்துவமான திட்டங்களை வகுத்தும், செயல்படுத்தியும் பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் வழியில் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக முழுமையான அர்ப்பணிப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் சமூகநீதி மற்றும் சமத்துவ சிந்தனைகள் குறித்து அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளது. வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021ம் ஆண்டு 445ல் இருந்து 2024ம் ஆண்டு 368 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 19 விழுக்காடு குறைவாகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் பொதுப்பிரிவினரின் கல்வியறிவு 80.09 விழுக்காட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு 73.26 விழுக்காட்டிலும் உள்ளது. கல்வி அறிவை உயர்த்தும் பொருட்டு இந்த துறையின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.3,924 கோடியில், கல்வி சார்ந்த திட்டங்களுக்காக மட்டும், 2 ஆயிரத்து 798 கோடி ரூபாயில், அதாவது சுமார் 71.31 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக வாழ்வாதார திட்டங்களுக்காக ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் வீதம், 4 ஆண்டுகளில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற திட்டம், 2024-2025 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2066 தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியமாக 243 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இதில் 400 மகளிர் தொழில்முனைவோர் 41 கோடியே 87 லட்சம் ரூபாய் மானியமாக பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றவும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் வாரியத்தின் சார்பில் உன்னத திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கான இத்திட்டத்தினை தொடர்ந்து மேற்கொள்ளும் உறுதியுடன் இந்த அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சர்கள் கோவி. செழியன், கணேசன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், செல்வம், திருமாவளவன், ராணி குமார், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், துறைச் செயலாளர்கள், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* நந்தனத்தில் ரூ.44.50 கோடியில் விடுதி ஏப். 14ம் தேதி முதல்வர் திறக்கிறார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கனவினை நனவாக்கும் பொருட்டு சென்னை, நந்தனம், எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன், 121 அறைகளோடு கூடிய 500 மாணவர்கள் தங்கி பயில நவீன வசதியான நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சி கூடம், உள் அரங்கு விளையாட்டு கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய விடுதி ரூ.44.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தை போற்றும் வண்ணம், சமத்துவ நாளான அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி மாணவர்களின் நலனுக்காக இந்த விடுதி திறக்கப்படவுள்ளது. எனவே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் திறப்பு விழாவிலே கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இந்த கூட்டத்தின் மூலமாக உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு உயர்த்த ரூ.2,798 கோடி ஒதுக்கீடு: உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: