* ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டனர்
* சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்
* 2வது நாளாக இன்றும் நடக்கிறது
சென்னை: சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி கல்லூரி இணைந்து 2 நாட்கள் நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரமாண்ட கல்வி கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டனர். பிளஸ் 2 படித்து முடித்து தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது மானவர்களிடையே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது.
பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன படிக்கலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு ஆண்டும் தினகரன் நாளிதழ் சார்பில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரமாண்ட கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும், தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் பிரமாண்ட கல்வி கண்காட்சி தொடக்க விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் முன்னிலையில், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
முதல் நாளான நேற்றைய கண்காட்சியை பார்வையிட காலை 9 மணி முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்தனர். குறிப்பாக கிரிக்கெட் போட்டி, விடுமுறை நாள் மற்றும் வாட்டி எடுக்கும் கோடை வெப்பத்தை பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் பஸ், கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களின் அரங்குகளில் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர்.
ஏஐ மற்றும் ட்ரோன் சார்ந்த படிப்புகளுக்கு தற்போது அதிக அளவில் வரவேற்பு உள்ளதால் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த ட்ரோன்களை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். மேலும், கண்காட்சியில் தொழில் நெறி வழிகாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீட் தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, போட்டோ கிராபி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கான ஊக்கத்தொகைகள் குறித்த வழிமுறைகளும் சொல்லி கொடுக்கப்பட்டது. உள்நாட்டு படிப்புகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இதுதவிர கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், ஊக்கத்தொகை பெறுவது எப்படி, கட்டண சலுகைகள் பெறுவது எப்படி உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்கள் மாணவ-மாணவிகளுக்கு கொடுக்கப்பட்டது. மேலும், பெற்றோர்களுக்கும் முறையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இதனால் எந்த ஒரு புரிதலும் இல்லாமல் வந்த தங்களுக்கு இந்த கண்காட்சி சிறந்த வழிகாட்டியாக இருந்தது என பெற்றோர்களும் மகிழ்ச்சியாக சென்றனர். மாணவர்கள் தங்கள் பள்ளி நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர். நேரம் செல்ல செல்ல மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. எல்லா ஸ்டால்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கல்வி மட்டுமின்றி, மாணவர்கள் வங்கியில் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
* நேற்றும், இன்றும் என 2 நாட்கள் நடைபெறும் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது.
* ஏஐ மற்றும் ட்ரோன் சார்ந்த படிப்புகளுக்கு தற்போது அதிக அளவில் வரவேற்பு உள்ளதால் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த ட்ரோன்களை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
* உள்நாட்டு படிப்புகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
The post தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்விக்கண்காட்சி அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.