அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை ஊசியால் தர்பூசணி நிறம், சுவையை மாற்றினால் கடுமையான நடவடிக்கை

சென்னை: ஊசியின் மூலம் தர்பூசணிபழத்தின் நிறம், சுவையை மாற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, அடையார் மண்டலம், இந்திரா நகர், சென்னை தொடக்கப்பள்ளியில் கோடைக்கால வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, தர்ப்பூசணி பழத்தில் ஊசி மூலம் கலப்படம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தர்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள பழம் ஆகும். இந்த பழத்தை உட்கொள்வது நல்லது என்றாலும், தீய நோக்கம் கொண்டவர்கள், குறுகிய காலத்திலேயே அதிகம் இலாபம் பார்க்க நினைப்பவர்கள், உண்ணும் உணவிலேயே கலப்படம் செய்வது மன்னிக்க முடியாதது. இவர்கள் இந்த பழத்தில் ஊசியின் வாயிலாக நிறத்தினை மாற்றுவது, இனிப்புச் சுவையை அதிகம் கூட்டுவது என்கின்ற வகையில் ஊசி மூலம் செலுத்துவது என்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மையில் கிருஷ்ணகிரியில் கூட ஒரு கடையில் தர்பூசணி பழம் தொடர்ந்து இனிப்பாக இருக்கிறது என்று சந்தேகம் அடைந்து உணவுப் பாதுகாப்பு துறையினர் சென்று ஆய்வு செய்ததில் அந்த பழங்களில் ஊசியின் மூலம் ரசாயானம் கலந்திருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கூட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை ஊசியால் தர்பூசணி நிறம், சுவையை மாற்றினால் கடுமையான நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: