3 முறை தோல்வி; 4வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த மாணவி பயத்தில் தற்கொலை: ஊரப்பாக்கத்தில் சோகம்

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் 3 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி, 4வது முறையாக தேர்வு எழுத இருந்த நிலையில், பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறம் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தேவதர்ஷினி (21) என்பவர் 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார்.

இந்நிலையில், வரும் 4ம் தேதி மீண்டும் 4வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்தார். இந்த தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்து வந்தார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததால் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவதர்ஷினி, மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

The post 3 முறை தோல்வி; 4வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த மாணவி பயத்தில் தற்கொலை: ஊரப்பாக்கத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: