அதிகாரிகள் சொல்லித்தான் அமைச்சர்கள் வேலை செய்கிறார்கள் தெர்மாகோலை வைத்தே என்னை ஓட்டுகிறீர்களே… பேரவையில் செல்லூர் ராஜூ மீண்டும் நகைச்சுவை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் மதுரை மேற்கு செல்லூர் ராஜூ (அதிமுக) பேசியதாவது: இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை படித்து பார்த்தேன். என் கண்ணுக்கு தெரிந்தவரை அதில் ஒன்றும் இல்லை.

* துரைமுருகன் (அவை முன்னவர்): உறுப்பினர் செல்லூர் ராஜூ நல்ல கண் டாக்டரை பார்க்க வேண்டும்.

* செல்லூர் ராஜூ: ஊரக வளர்ச்சி திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் இந்த ஆண்டுக்குள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

* அமைச்சர் ஐ.பெரியசாமி: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இந்த ஆண்டு தற்போது 50 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பசுமை வீடு என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆனால் அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. திமுக ஆட்சி வந்த பிறகு தான் நீங்கள் விட்டு சென்ற 30 ஆயிரம் வீடுகளை நாங்கள் கட்டி கொடுத்தோம்.

* எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், எவ்வளவு நாட்களில் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தான் எங்கள் உறுப்பினர் கேட்கிறார்.

* அமைச்சர் ஐ.பெரியசாமி: ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

* செல்லூர் ராஜூ (அதிமுக): 2025-26ம் ஆண்டு 6 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராம சாலைகள் அமைக்க ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை.

* அமைச்சர் ஐ.பெரியசாமி: கடந்த ஆண்டு 9,020 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி மூலம் கடன் பெறப்பட்டு சாலைகள் முழுவதுமாக அமைக்கப்படும். வருவாய் அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

* செல்லூர் ராஜூ (அதிமுக): பள்ளிகளை மேம்படுத்த ரூ.2497 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளதாக சொல்கிறீர்கள். இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டும் பல பள்ளிகள் இன்னும் சிதிலமடைந்து இருக்கிறது.

* அமைச்சர் ஐ.பெரியசாமி: கடந்த அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு பள்ளியிலாவது புதிய கட்டிடங்கள் கட்டினீர்களா? ஆனால் இன்று பள்ளிகள் அனைத்தும் நல்ல தரத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பள்ளிகளும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் உங்கள் ஆட்சியில் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டது என்று சொல்லுங்கள்.

* செல்லூர் ராஜூ (அதிமுக): சொல்லும்போது புள்ளி விபரத்துடன் தருகிறோம்.

* அமைச்சர் பெரியசாமி: எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் முதல்வரின் சாதனை. இனி எப்போதும் திமுக ஆட்சிதான்.

* எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் 513 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது.

* அமைச்சர் அன்பில் மகேஸ்: அடுத்த ஆட்சி பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறை பற்றி சிந்தித்து செயல்பட்டு வருகிறோம். அதிமுக ஆட்சியில் 513 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதாக கூறினீர்கள். இதில் 364 பள்ளிகளில் எந்த உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. அதையும் சேர்த்து நாங்கள் தான் கட்டியுள்ளோம். தற்போது திமுக ஆட்சியில் 7,500 வகுப்பு அறைகள் கூடுதலாக கட்டப்பட்டுள்ளது. 2027ம் ஆண்டுக்குள் 18 ஆயிரம் வகுப்பு அறைகள் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

* செல்லூர் ராஜூ (அதிமுக): அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா ஒரு நாளில் 20,920 ஆசிரியர்களை பணியில் அமர்த்தினார். ஆனால் திமுக ஆட்சியில் இதில் ஒரு சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர்கள் பற்றக்குறை உள்ளது. புதிதாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

* அமைச்சர் அன்பில் மகேஸ்: புதிதாக ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருந்த நிலையில் நீதிமன்றம் சென்றார்கள். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நல்ல தீர்ப்பு வரும், அப்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விடும்.

* செல்லூர் ராஜூ (அதிமுக): ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். ஒரு ஆண்டில் எப்படி விமான நிலையம் அமைக்கப்படும்.

* அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: தமிழ்நாட்டில் இனி என்றென்றும் திராவிட மாடல் ஆட்சிதான். ஒரு ஆண்டு அல்ல, பல 100 ஆண்டு இந்த ஆட்சி தொடர்ந்து இருக்கும். தண்ணீரில் தெர்மாகோல் போடுவது எளிதான பணி, ஆனால் விமானத்தை பறக்க விடுவது எளிதல்ல. நிச்சயமாக ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை திறந்து வைப்பார். அதேபோன்று ஓசூரிலும் மிக விரைவில் சட்டரீதியான பணிகள் நிறைவுபெற்று, விமான நிலையம் அமைக்கப்படும்.

* செல்லூர் ராஜூ (அதிமுக): அதிகாரிகள் சொல்லி தான் அமைச்சர்கள் ஒரு வேலையை செய்கிறார்கள். அதைபோன்று அதிகாரிகள் சொன்னதால் தான், நானும் தெர்மாகோல் போட்டேன். அதை வைத்தே ஓட்டுகிறீர்களே. ராஜா வாழ்க…. இவ்வாறு விவாதம் நடந்தது.

* அமைதியாக இருந்த செங்கோட்டையன்
சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் எத்தனை பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது என்று சொல்ல முடியுமா? என்று செல்லூர் ராஜூ பேச்சுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி சவால் விடுத்தார். அப்போது சரியான பதில் சொல்ல முடியாமல் செல்லூர் ராஜூ சமாளித்தார். அப்போது அவையில் இருந்த அதிமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறாமல் தயங்கியபடியே அவையில் இருந்தார். ஒரு பிரச்னை குறித்து பேசும்போது, உறுப்பினர்கள் இருக்கையில் இருந்தபடி கையை தூக்கி பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்க வேண்டும்.

ஆனால் செங்கோட்டையன் கையை தூக்காமல் இருக்கையில் இருந்தபடியே சபாநாயகரிடம் செய்கை மூலம் அனுமதி கேட்டார். இதை சபாநாயகர் கவனிக்கவில்லை. அப்போது, செங்கோட்டையன் அருகில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், செங்கோட்டையனை எழுந்து பதில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும், பதில் அளிக்காமல் செங்கோட்டையன் தயங்கியபடியே இருக்கையில் இருந்து விட்டார். இது அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

The post அதிகாரிகள் சொல்லித்தான் அமைச்சர்கள் வேலை செய்கிறார்கள் தெர்மாகோலை வைத்தே என்னை ஓட்டுகிறீர்களே… பேரவையில் செல்லூர் ராஜூ மீண்டும் நகைச்சுவை appeared first on Dinakaran.

Related Stories: