ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே வெறிநாய் கடித்ததில் ஒன்றரை வயது குழந்தை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதில் குழந்தையின் கிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்பதால் பெற்றோர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள மூரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. கூலித் தொழிலாளியான இவருக்கு ஒன்றரை வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறான். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் குழந்தை வெற்றிவேல் வீட்டின் அருகில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த வெறிநாய் ஒன்று குழந்தை வெற்றிவேலை சுற்றி வளைத்து பாய்ந்தது. நாய் அருகில் வந்ததும் குழந்தை தப்பியோட முயற்சி செய்துள்ளது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை அந்த வெறிநாய் சரமாரியாக கடித்துக் குதறியது. இதில் முகம் உள்பட உடலின் பல்வேறு பகுதிகளில் குழந்தை வெற்றிவேலுக்கு படுகாயம் ஏற்பட்டது. கொடூரமாக நாய் கடித்ததில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து வெறிநாயின் பிடியில் இருந்து குழந்தையை மீட்டனர். பின்னர் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளனர்.
அங்கு கவலைக்கிடமான நிலையில் குழந்தை வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வரும் பழனி, தனது குழந்தையை காப்பாற்றுவதற்கு செய்வதறியாமல் தவித்து வருகிறார். வெறி நாய் கடித்து குதறியதில், உயிருக்குப் போராடி வரும் ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்ற நல்ல உள்ளம் படைத்தவர்கள் முன் வருவார்களா என்று குழந்தையின் பெற்றோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
The post வெறிநாய் கடித்ததில் ஒன்றரை வயது குழந்தை கவலைக்கிடம்; சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்பதால் பெற்றோர் தவிப்பு: உதவி கேட்டு கதறல் appeared first on Dinakaran.