கிராமத்து இளைஞனாக நடிப்பது சுலபம் இல்லை: சாந்தனு

சென்னை: ‘மதயானைக் கூட்டம்’ படத்தை தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள படம், ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி தயாரித்துள்ளார். வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். சாந்தனு, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். வரும் 12ம் தேதி படம் ரிலீசாகிறது. இது குறித்து சாந்தனு கூறுகையில், ‘தயாரிப்பாளர் கண்ணன், என் தந்தை பாக்யராஜ் எனக்கு என்ன செய்ய நினைப்பாரோ, அப்படி நான் சினிமாவில் முன்னேற தேவையான அனைத்தையும் செய்தார்.

எனது ‘சக்கரகட்டி’ படத்துக்குப் பிறகு ரசிகர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படமாக ‘இராவண கோட்டம்’ இருப்பது குறித்து சந்தோஷப்படுகிறேன். இதில் நான் ஹீரோ என்பதை தாண்டி, தயாரிப்பு பணிகளையும் கூடுதலாகப் பார்த்தேன். தயாரிப்பு என்பது மிகவும் கடினமான வேலை. அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வைக்க நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன். அனைவரும் பல நாட்கள் தூங்கவில்லை. இப்படம் தொடங்கி முடிந்த 4 வருடங்களில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

தற்போது முழு படத்தையும் பார்த்த பிறகு திருப்தி ஏற்பட்டது. கிராமத்து இளைஞனாக நடிக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். அது அவ்வளவு சுலபம் கிடையாது என்பதை படப்பிடிப்பில் உணர்ந்தேன். ஒரு காட்சியில் கால் முழுக்க ரத்தம் வழிந்தோட நடித்தேன். எந்தப் படத்துக்கும் இப்படி நான் கஷ்டப்படவில்லை. இதில் தென் மாவட்டத்தில் இருக்கும் அரசியலைப் பற்றி பேசியிருக்கிறோம்’ என்றார். விக்ரம் சுகுமாரன் கூறும்போது, ‘இப்படத்தின் ஷூட்டிங்கில் ஒருநாள் கூட நான் சிரித்துப் பேசியதில்லை. காரணம், நான் ஒரு பிடிவாதமான இயக்குனர். யாரிடமும் இரக்கம் காட்டவில்லை. இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். அதுதான் என் பாணி. இப்படத்தின் பாரத்தை தலையில் ஏற்றிக்கொண்ட சாந்தனு, கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிபெறுவார்’ என்றார்.

The post கிராமத்து இளைஞனாக நடிப்பது சுலபம் இல்லை: சாந்தனு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: