கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ரூ.20,000 வாங்கி கைதியை தப்ப விட்ட போலீஸ் கைது: எஸ்எஸ்ஐ உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

கோவை: ஆந்திர மாநிலம் எள்ளுரூ பகுதியை சேர்ந்தவர் பிம்முடுஅஜித்குமார் (29). இவர் ஆன்லைன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார் விற்பதாக கூறி பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கிருந்து தப்பி, திருப்பூர் வந்து பதுங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். தொடர்ந்து திருப்பூரில் உள்ள கால் டாக்சி டிரைவர் இருவரிடம் அரங்கேற்றிய மோசடி புகாரில் அவரை திருப்பூர் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி உடல்நிலை சரியில்லை என கூறியதால் கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் அனுமதித்தனர். அங்கு கடந்த 12ம்தேதி இரவு கழிவறைக்கு செல்வதாக கூறி தப்பிச் சென்றார். புகாரின்படி ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பிம்முடு அஜித் குமாரை தேடினர். அவர் காரில் சேலம் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை சேலம் ஓமலூர் பகுதியில் பிம்முடு அஜித் குமார், நண்பர் விஜயகுமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பிம்முடு அஜித்குமார் தப்பி செல்ல அருப்புக்கோட்டையை சேர்ந்த ஷேக் முகமது ரோஷன் (23) என்ற 2ம் நிலை காவலர் உதவியுள்ளார். அவருக்கு பிம்முடு அஜித்குமார், விஜயகுமாரிடம் பேசி ஜிபேவில் ரூ.20 ஆயிரம் பெற்று கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. மருத்துவமனை கைதிகள் வார்டில் அஜாக்கிரதையாக இருந்த சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் போலீஸ்காரர்கள் பாரதிதாசன், அசோக்குமார் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Related Stories: