தண்டையார்பேட்டை: தங்க காயின் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கில் ராயபுரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது குறைந்த விலைக்கு தங்க காயின் தருவதாக ஆசைவார்த்தை கூறி 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரை ஏமாற்றி பணம் வசூலித்துள்ளார். இந்த விவகாரம் காவல்துறையினர் மத்தியில் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், தங்க காயின் மோசடி தொடர்பாக பல காவல்துறையினர் புகார் கொடுக்காமல் இருந்து வந்தனர். ஒரு சில காவல்துறையினர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பெண் காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் பிரபு மணி என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கொடுங்கையூர் பகுதியில் அலுவலகம் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது காவலர்கள் குறைந்த பணத்தில் தங்கம் கொடுப்பதாக நம்பி பணத்தை கொடுத்து முதலில் தங்க காயின் வாங்கி உள்ளனர். இதனைக் கண்டு ஆசை அதிகமானதால் தொடர்ந்து இவர்கள் அதிக பணத்தை கொடுத்து தங்க காயின் வாங்கலாம் என்று எண்ணி பணத்தை கொடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து பிரபு மணி இவர்களுக்கு தங்க காயின் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாக சென்றுவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. காவலர்களை இந்த திட்டத்தில் சேருவதற்கு பெண் ஆய்வாளர் உதவியாக இருந்துள்ளார். அவருக்கு இதன் மூலம் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரபு மணி இதில் கிடைத்த பணத்தை வைத்து பிரமாண்ட திருமண மண்டபம், கல்குவாரி ஆகியவற்றை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் மோசடி செய்ய பிரபுமணிக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் ஆய்வாளர் ஷீலா மேரியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று ஆய்வாளரையும் கைது செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரை ஏமாற்றிய வழக்கில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன், ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
