ஆம்பூர் அருகே ரூ.50 ஆயிரத்துக்காக 2மாத பெண் குழந்தையை விற்ற தாய்: அடுத்தடுத்து கைமாறிய குழந்தை நாமக்கல்லில் மீட்பு

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே தரைக்காட்டை சேர்ந்தவர் ஷபீர்(38), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ஜபீனா(35), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களூக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த மே 20ம் தேதி ஜபீனாவை ஆம்பூர் அடுத்த நரியம்பட்டை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரஷித் அஹ்மத்(50) அணுகி, ரூ.50 ஆயிரத்தை கொடுத்து பெண் குழந்தையை வாங்கி உள்ளார். பின்னர் குழந்தையை வேலூரில் உள்ள புகழேந்தி(35) என்பவருக்கு அதிக விலைக்கு கைமாற்றி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஷபீர் குழந்தை பற்றி ஜபீனாவிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜபீனா மீண்டும் ரஷித்தை அணுகி குழந்தையை தந்து விடுமாறும் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறி உள்ளார். ஆனால், ரஷித் அவரை அலைக்கழித்துள்ளார். இதையடுத்து ஜபீனா உம்ராபாத் போலீசில் புகார் தெரிவித்தார். தீவிர விசாரணையை அடுத்து குழந்தையை விற்றதாக ஜபீனா, இடைத்தரகராக வேலை செய்த ரஷித் அஹ்மத் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு தம்பதிக்கு அந்த குழந்தை விற்கப்பட்டது தெரியவந்து அங்கு சென்று சதீஷ்குமார்(33), ஹரிணி(27) தம்பதியிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இதில் மூளையாக செயல்பட்ட ஆம்பூரை சேர்ந்த கார் டிரைவரான புகழேந்தி(41), ஈரோடு அடுத்த பெருந்துறையை சேர்ந்த யுவராஜ் மனைவி உமா மகேஸ்வரி(42) ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிட மேஸ்திரி ரஷித் அஹ்மத், கார் டிரைவரான புகழேந்தியுடன் நட்பில் இருந்தார். புகழேந்தி மூலம் உமா மகேஸ்வரியிடம் குழந்தையை அவர் கொடுத்துள்ளார். பின்னர், உமா மகேஸ்வரியின் உறவினரான குளித்தலையை சேர்ந்த அலாவுதீன் மூலமாக சதீஷ்குமார் தம்பதியிடம் பேரம் பேசி ரூ.13 லட்சத்தை வாங்கி குழந்தை ஒப்படைக்கபட்டது தெரிய வந்துள்ளது. அலாவுதீனையும் போலீசார் மடக்கி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: