பெரம்பூர்: ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, தண்ணீரில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக காதலன் மீது காதலி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாலதி (28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2024 முதல் 2025 வரை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது தாம்பரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த கோகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி உள்ளது. அவர் பகுதி நேரமாக டைரக்டராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில். கோகுல் மற்றும் மாலதி இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது, கோகுல் மாலதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது குடும்பத்தாருடன் பேச வைத்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என மாலதியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நமது திருமணம் பற்றி பேச வேண்டும் என மாலதியை கடந்த வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற மாலதிக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீரை குடித்த பிறகு மாலதி லேசாக மயங்கி உள்ளார். உடனே அவர் தனது தந்தையை செல்போனில் அழைக்க முயற்சி செய்தபோது கோகுல் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு என் மீது நம்பிக்கை இல்லையா எனக்கூறி மாலதியிடம் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மாலதியுடன் கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். மயக்கம் தெளிந்து மாலதி இதுகுறித்து கேட்டபோது, உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு மாலதியுடன் சரிவர பேசாமல் அவரது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம், தொலைபேசி உள்ளிட்ட அனைத்தையும் பிளாக் செய்து விட்டார்.
இதுகுறித்து மாலதி கோகுலின் அண்ணன் மற்றும் தாயாரிடம் கேட்டபோது அவர்கள் மாலதியை ஓரிடத்திற்கு வரவழைத்து சரமாரியாக கேள்வி கேட்டு கோகுலுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய போவதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கோகுலுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி கோகுல் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாலதி புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். புகார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
