சேலம்: சேலம் நெய்க்காரப்பட்டி புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40), தவெக பிரமுகர். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறார் என பல்வேறு புகார்களை தெரிவித்து, சேலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஆடியோ வெளியிட்டார். அதன்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், பென்-டிரைவ்வில் சில பெண்களுடன் அவர் ஆபாசமாக இருப்பது உள்ளிட்ட வீடியோக்கள் இருந்தன. அந்த வீடியோவில் இருக்கும் பெண்களில், 32 வயது கொண்ட ஒரு பெண், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், தன்னுடன் பழகி தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக தெரிவித்தார். இப்புகாரின் பேரில், தவெக பிரமுகர் மணிகண்டன் மீது, 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். விசாரணைக்கு பின், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, மணிகண்டன் மீது முதலில் சமூக வலைதளத்தில் ஆடியோ மூலம் புகார் தெரிவித்த பெண் மாயமாகி விட்டார். அவரிடம் மணிகண்டன் மிரட்டல் விடுத்தது தொடர்பான மேலும் பல ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த பெண், தன்னை அவரது நண்பர்களுடன் பழகச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளதால், பல பெண்களை மணிகண்டன் ஆபாச படம் எடுத்து மிரட்டி, விபசாரத்தில் தள்ளினாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பெண்கள் மற்றும் பாலியல் தொடர்பான வழக்காக இருப்பதால், இந்த வழக்கை கொண்டலாம்பட்டி போலீசில் இருந்து, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சேலம் டவுன் மகளிர் போலீசில், கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, சேலம் டவுன் மகளிர் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார், விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முதலில் புகார் தெரிவித்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
