சீர்காழி, ஏப்.12: மயிலாடுதுறை புகழ்மிக்க சைவத் திருமடமான கதருமை ஆதீன உணவுச் சாலையில் தினமும் காலை, மதியம், இரவு, என்று மூன்று வேளையும் பத்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம்* தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுற்று இரண்டாம் ஆண்டு துவக்க விழா 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
ஆதீன கர்த்தர் அவர்களுடைய எண்ணத்தில் தோன்றிய இத்திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது முதல் இன்று வரை ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் பெரும் வரவேற்பை பெற்று ஓராண்டில் சுமார் நான்கரை லட்சம் மக்கள் உணவருந்தி உள்ளனர். இச்சேவை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ள குருமகா சன்னிதானம் இத்திட்டத்தை இன்னும் சிறப்பாக நடத்திட பல்வேறு உதவிகளை கொடுத்து வருகிறார்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த உணவுச் சாலை இயங்கி வருகிறது. தருமை ஆதீனத்தில் பத்து ரூபாய்க்கு உணவு கொடுப்பது என்பது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். இதனை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
