சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் கடற்கரைராஜ் பிரசாரம்

சாத்தூர், ஏப்.14: சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திமுகவை ஆதரிக்க வேண்டும் என, திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் பிரசாரம் செய்தார். சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கிராமமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி பகுதியில் உள்ள நேருகாலனி, கே.சண்முகசுந்தரபுரம், தொம்பக்குளம், காளவாசல், எம்.ஜி.ஆர் காலனி உட்பட 18 கிராமங்களில் வேட்பாளர் கடற்கரைராஜ் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திமுகவை ஆதரிக்க வேண்டும்.

திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். மாணவ, மாணவிகள் மற்றும் முதியோருக்கான உதவித்தொகையும் உயர்த்தி வழங்கப்படும். திமுக அரசின் விடியல் பயணம் திட்டம் மூலம் சாத்தூர் தொகுதியில் அதிகளவில் உள்ள கூலி வேலை பார்க்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் இலவசமாக பஸ்சில் பயணித்து பயன்பெற்றுள்ளனர். எனவே திமுக அரசின் திட்டங்கள் தொடர மீண்டும் திராவிட மாடல் அரசு அமைய உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்’’ என தெரிவித்தார். பிரசாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் மல்லி ஆறுமுகம், ஜெயப்பாண்டியன், கிருஷணக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: