அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

திருப்புத்தூர், ஏப்.14: திருப்புத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 29ல் பூச்சொரிதழ் விழா நடந்தது. தொடந்து ஏப்.5ல் முதல் நாளன்று மாலையில் உற்சவ அம்பாள், இளையாத்தங்குடியிலிருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தது. பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தினந்தோறும் அம்மன் வெள்ளி ரிஷப, அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. தொடந்து 9ம் நாளான நேற்று காலையில் முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மாலையில் தேரோட்டம் நடந்தது. இதில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளையாத்தங்குடி, சாங்கியம், திருப்புத்தூர், சேவிணிப்பட்டி, கீழச்சிவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், மிதலைப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: