பெரம்பலூர், குன்னம் தொகுதியில் உள்ள 732 வாக்குச்சாவடிகளில் பொருத்த சிசிடிவி கேமராக்கள்

பெரம்பலூர்,ஏப்.14: பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 732 வாக்குச்சாவடிகளில் பொருத்த தேவையான சிசி-டிவி கேமராக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கின. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,40,937 ஆண் வாக்காளர்கள், 1,49,700 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலின வாக்காளர்கள் 29 பேர்கள் என மொத்தம் 2,90,666 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,32,318 ஆண் வாக்காளர்கள், 1,35,774 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலின வாக்காளர்கள் 3 பேர்கள் என மொத்தம் 2,68,095 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2,73,255 ஆண் வாக்காளர்கள், 2,85,474 பெண் வாக்காளர்கள், 3ஆம் பாலின வாக்காளர்கள் 32 பேர்கள் என மொத்தம் 5,58,761 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் 387 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 345 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 732 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த 732 வாக்குச்சாவாடிகளிலும் வருகிற 23ஆம்தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு முறையாக, பாதுகாப்பாக நடைபெறுகிறதா, தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடக்கிறதா என்பதைக் கண்காணித்திட 732 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவற்றில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை வீடியோ காட்சிகளில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி முன்னதாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 732 வாக்குச்சாவடிகளில் பொருத்த தேவையான சிசிடிவி கேமராக்கள் வந்திறங்கி உள்ளன. இவை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட உள்ளன.

Related Stories: