நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய வாலிபர் அதிரடி கைது: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பரபரப்பு

ஸ்ரீவில்லிபுத்தூ: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையின்போது நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(36). இவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்பநல நீதிமன்றத்தில், மனைவி தொடுத்த ஜீவனாம்ச வழக்கு நீதிபதி சுதாகர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுதாகர் நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார்.

இந்த அரிவாள் வழக்கறிஞர்கள் அமரும் இடத்தில் விழுந்தது. இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பாலமுருகனை மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து வந்த வில்லிபுத்தூர் போலீசார், பாலமுருகனை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பாலமுருகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே உள்ள ஜீவனாம்ச வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், பாலமுருகன் நீதிபதியை நோக்கி அரிவாளை வீசியுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக நீதிமன்ற ஊழியர் முருகையா புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், எஸ்பி கண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Related Stories: