*அரிவாள், கத்தி பறிமுதல்
சாத்தூர் : சாத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த கூலிப்படைக் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் குருலிங்காபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அய்யன்ராஜ். இவரது தம்பி அருண்குமார். கடந்த 8ம் தேதி இரவு அய்யன்ராஜ் தனது வீட்டு முன்பு நண்பர் குமார் என்பவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த அஜித்குமார், ‘எதுக்குடா… என் வண்டியில உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கீங்க’ என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அஜித்குமார் தனது வீட்டில் குடியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அய்யன்ராஜை தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது தம்பி அருண்குமாரையும் தாக்கினர்.
இதுகுறித்து அருண்குமார் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையிலான போலீசார் அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அவரது வீட்டில் சோதனை செய்தபோது அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த 5 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் மதுரை சிந்தாமணி பர்மா காலனியை சேர்ந்த யோகேஷ் (22), காமராஜர் சாலையை சேர்ந்த கோபி (25), முகேஷ் (24), இனமனஞ்சி நகர் முத்துமணி (27), அய்யர்பங்களா நாக அர்ஜூன் (26) என்பதும், இவர்கள் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், குற்ற செயல்களில் ஈடுபட அஜித்குமாரின் வீட்டில் கடந்த 3 மாதமாக வாடகைக்கு தங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவான அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
