புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அன்மையில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 91.23% வாக்குகள் பதிவாகின. இது இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திரத் தொகுதியாக மண்ணாடிப்பட்டு தொகுதி கருதப்பட்டது . இங்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில உள்துறை அமைச்சரான நமச்சிவாயம் களம் கண்டார். இதனால் இந்தத் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வாக்குப்பதிவு நேரத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் மற்றும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
வாக்குப்பதிவு முடியும் தருவாயில் இளைஞர்கள் சிலர் கள்ள ஓட்டுப் போடுவதாகப் புகார் எழுந்தது. இதைக் கண்டித்து காங்கிரஸ் வேட்பாளர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகாரை அடுத்து, கள்ள ஓட்டுப் போட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற வாலிபரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதும், அவரது வாக்கை பிரசாத் சட்டவிரோதமாகச் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.
சுமார் இரண்டு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு, கள்ள ஓட்டுப் பதிவு செய்த குற்றத்திற்காக விழுப்புரம் வாலிபர் பிரசாத்தை போலீசார் இன்று முறைப்படி கைது செய்தனர். மாநிலத்தின் உள்துறை அமைச்சரே போட்டியிட்ட தொகுதியில், ஒரு வெளிமாநில வாலிபர் கள்ள ஓட்டுப் போட்டு கைதாகியுள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
