ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 346 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இரவு இந்திய கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீண்டும் வந்த இலங்கை கடலோர காவல் படை மற்றும் கடற்படை ரோந்து படகுகள் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்தனர்.
இதில் சேந்தி ராயப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களான ஆரோக்கிய ஆசாத் (36), நிர்மல் (41), கெர்ஷின் ரிசப் (28), நிதிஷ்குமார் (28) ஜான் சிசர்ட் (45), மெல்டன் (36), சுரேஷ் (46), சரவணன் (48), சந்தன மரியான் (43), அரவிந்த் பாண்டி (25) ஆகிய 10 பேரை படகுடன் சிறைபிடித்தனர். மீனவர்களை படகுடன் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று, மேல் நடவடிக்கைகாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞானசீலன் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் காரல் மார்க்ஸ் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்து படகை பறிமுதல் செய்துள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. மீனவர்களின் பிரச்னையை ஒன்றிய பாஜ அரசு வேடிக்கை பார்ப்பது ஒட்டுமொத்த மீனவர்களையும் வஞ்சிக்கும் செயலாகும். சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டமன்றத் தேர்தலில் மீனவ சமூகமும் பாஜவை கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கும்’’ என்றார்.
