சகோதரிகளான சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திண்டுக்கல்: சகோதரிகளான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி, திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (38), கார் டிரைவர். இவர் கடந்த 2024ம் ஆண்டு வேலைக்காக திண்டுக்கல் வந்தார். இங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு 13 மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர். விக்னேஷ்வரன் பெண்ணுடன் நெருங்கி பழகவே, இருவரும் ஒன்றாக வசிக்க முடிவு செய்தனர்.

பின், திண்டுக்கல்லில் வாடகைக்கு வீடு எடுத்து விக்னேஷ்வரன், அந்தப் பெண் மற்றும் அவரது 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்தப் பெண் வீட்டில் இல்லாதபோது இரண்டு சிறுமிகளையும் விக்னேஷ்வரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விக்னேஷ்வரனை பிடித்து விசாரித்தனர். இதில், விக்னேஷ்வரனுடன் சேர்ந்து பெண்ணின் உறவினரான உத்தமபாளையத்தை சேர்ந்த முருகவேல் (42) என்பவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்தியதாரா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ‘சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த விக்னேஷ்வரன், முருகவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசுத் தரப்பில் தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

Related Stories: