ஓமலூர்: ஓமலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, அரசுப்பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன், 5 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பாலிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (45). இவர் காமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தற்போது 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். நேற்று மதிய இடைவேளையின்போது, ஸ்ரீவித்யா 5 வயது மகளான அசோக சிவசுந்தரியுடன், பள்ளி வளாகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு திடீரென வந்த அவரது கணவர் விஜயமுருகன் (50), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீவித்யாவை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் வெட்டு விழுந்த ஸ்ரீவித்யா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தைக் கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறியடித்து ஓடினர். சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து, விஜயமுருகனை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தனது மகளை தூக்கி கொண்டு, பள்ளியின் சுற்றுச்சுவரைத் தாண்டி குதித்து தப்பி ஓடி விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் விஜயமுருகனை தேடினர். அப்போது, பள்ளிக்கு பின்புறம் அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில், சிறுமியும், விஜயமுருகனும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். விசாரணையில், விஜயமுருகன் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த விஜயமுருகனுக்கு, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவித்யாவை 2வதாக திருமணம் செய்துள்ளார். விஜயமுருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்ரீவித்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை விஜயமுருகன் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். உன்னைக் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டியதால், பயந்து போன ஸ்ரீவித்யா, இதுகுறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.மேலும், உயிருக்கு பயந்து, கடந்த ஒரு மாதமாக கணவரைப் பிரிந்து, ஓமலூர் நகரில் மகளுடன் வசித்துக் கொண்டு பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தான், நேற்று அவரை பள்ளிக்குள் புகுந்து விஜயமுருகன் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் ஓமலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
