சென்னை: சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை வந்தது. பயணிகள் வெளியேறியதும் லோடர்கள், விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகள் இருக்கையின் அடியில் கருப்பு கலரில் பார்சல் ஒன்று கிடந்தது. உடனே விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். சுங்கத்துறை உயர் அதிகாரிகள் பார்சலை கைப்பற்றி வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா என சோதனை செய்தனர்.
பின்னர், பார்சலை பிரித்து பார்த்தபோது 2 கிலோ எடைகொண்ட சுத்தமான 24 கேரட் தங்க கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3.10 கோடி. இதையடுத்து தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். கடத்தலில் ஈடுபட்ட பயணி, தங்க கட்டிகளை இருக்கையின் அடியில் மறைத்து வைத்துவிட்டு, இறங்கிய நிலையில் விமானத்தை சுத்தப்படுத்தும் லோடர் அல்லது விமான நிலைய கடைநிலை ஊழியர் மூலமாக, தங்க கட்டிகளை வெளியில் எடுத்து வருவதற்கு திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால் அவ்வாறு கடத்தல் தங்கத்தை எடுக்க இருந்த நபர், வருவதற்கு முன்னதாகவே, இதை லோடர்கள் கண்டுபிடித்து விட்டதால், கடத்தல் ஆசாமிகள் வசம், தங்க கட்டிகள் செல்லாமல், சுங்கத்துறையிடம் சிக்கியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பயணியின் விவரங்களை சேகரித்ததோடு, விமானத்துக்குள் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சர்வதேச விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தல் பயணியையும், அந்தக் கடத்தலுக்கு துணை போக இருந்த கடைநிலை ஊழியரையும், தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.3.10 கோடி மதிப்புடைய தங்கக் கட்டிகள் விமானத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
